தங்கள் கட்சி வித்தியாசமான கட்சி என்று பெருமையோடு பி.ஜே.பி. தலைவர்கள் கூறுவார்கள். உண்மையில் ரொம்ப வித்தியாசமான கட்சிதான்.
வாஜ்பாய் பிரதமர் பீடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது பி.ஜே.பி. தலைவராக பங்காரு லட்சுமண் வீற்றிருந்தார். ஆயுத பேரத்திற்கு அவர் அச்சாரம் வாங்கியதைத் தொலைக்காட்சிகள் துல்லியமாக ஒளிபரப்பின. உண்மையில் பி.ஜே.பி. வித்தியாசமான கட்சிதான்.
நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்க பி.ஜே.பி. உறுப்பினர்கள் சிலர் லஞ்சம் வாங்கியதாகப் புகார் எழுந்தது. அந்தப் புகார்களும் தொலைக்காட்சிகளில் ஆதாரத்தோடு ஒளிபரப்பப்பட்டன. அத்துடன், அவர்கள் பதவி இழந்தனர். பி.ஜே.பி. பேசும் தர்மம், நியாயங்களெல்லாம் பஞ்சாய்ப் பறந்தன. உண்மையில் பி.ஜே.பி. வித்தியாசமான கட்சிதான்.
ஆள்மாறாட்டம் செய்து அடுத்தவர் மனைவிகளை வெளிநாடுகளுக்கு பி.ஜே.பி. எம்.பி.க்கள் அழைத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது. ஒரு எம்.பி. கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டார். இன்னும் நான்கு எம்.பி.க்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.
ஒரு காலத்தில் ஒழுக்கம், கட்டுப்பாடு, தொண்டு மனப்பான்மை கொண்ட கட்சியாக பி.ஜே.பி. கருதப்பட்டது. அந்தக் கட்சி ஆர்.எஸ்.எஸ். என்ற இந்துத்வா இயக்கம் பெற்ற அரசியல் குழந்தைதான். ஆனால், வளர வளர, அதிகாரத்தின் மீது ஆசை வர வர அதன் குணங்கள் கெட்டுப்போயின. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர் மீதும் விதவிதமான குற்றச்சாட்டுக்கள் குவிகின்றன.
பி.ஜே.பி.யின் சட்ட மூளை அருண்ஜேட்லி. நல்ல வழக்கறிஞர். வாதில் வல்லவர். வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அப்போது அமைச்சருக்குரிய பெரிய பங்களா அவருக்குக் கொடுக்கப்பட்டது. அமைச்சர் பதவி போனால், அந்த பங்களாவைக் காலி செய்ய வேண்டும். ஆட்சியே போன பின்னரும் அவரும் இன்னும் ஐந்து பி.ஜே.பி. தலைவர்களும் அரசு பங்களாக்களைக் காலி செய்ய மறுக்கிறார்கள்.
அவர்கள் நினைத்தால் அரண்மனைகளிலேயே வாழ முடியும். பலருக்கு அரண்மனையை விட உயர்வான பங்களாக்கள் உண்டு. ஆனாலும் அரசு பங்களாக்களை அவர்கள் காலி செய்வதாக இல்லை. உண்மையில் அவர்கள் வித்தியாசமானவர்கள்தானே?
இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் கிர் காடுகளில் சிங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் சரணாலயத்தை அரசே பாதுகாக்கிறது. ஒருநாள் அந்தச் சிங்கங்கள் ஆமதாபாத் வீதிகளில் வலம் வந்தன. எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
காவிக் கொடிகளுடன் வேலாயுதமும் சூலாயுதமும் ஏந்திய மனிதர்கள் வந்தனர். அவர்கள் ‘ஜெயராம்’ என்று முழக்கமிட்டுக் கொண்டே வந்தனர். ஆமதாபாத் நகரமே லங்கா தகனத்திற்கு ஆட்பட்டது. எங்கும் மரண ஓலங்கள். காந்தி பிறந்த மண்ணில் காட்டு ராசாங்கமா என்று சிங்கங்கள் வெட்கப்பட்டு கிர் காடுகளுக்குள் ஓடிவிட்டன. இப்படிச் சிங்கங்கள் வெட்கப்படும் படுகொலைகளைச் செய்பவர்கள் வித்தியாசமானவர்கள் தானே?
பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி போலி மோதல்களை நடத்தி, எத்தனை உயிர்களைப் பலி கொண்டார்கள் என்ற பட்டியல் இப்போது வெளியாகி வருகிறது. குற்றவாளிகளைத் தேட வேண்டிய காவல்துறையின் பெரிய அதிகாரிகளே இப்போது குற்றவாளிகளாகக் காராக்கிரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். உண்மையில் நரேந்திர மோடி கூட ரொம்ப வித்தியாசமானவர்தான்!
இப்போது உளுத்துப் போன புராண நம்பிக்கைகளைத் தூக்கி, அறிவியலை அடித்து வீழ்த்தும் போர் தொடுத்திருக்கிறார்கள். ராமாயணம் திரேதா யுகத்தில் நடந்தது என்கிறார்கள். அந்த யுகம் 13 லட்சம் ஆண்டுகள் என்கிறார்கள். அதன் பின்னர் துவாபர யுகம் வந்தது. அதற்கும் பல லட்சம் ஆண்டுகள் ஆயுள் என்றனர். பின்னர், இன்னொரு பல லட்சம் ஆண்டுகளை உள்ளடக்கிய கிருத யுகம் வந்தது. அந்த யுகமும் முடிந்து இப்போது கலியுகம் நடைபெறுகிறது.
கணக்கிட்டால், திரேதா யுகம் முடிந்து இப்போது 50 லட்சம் ஆண்டுகள் கடந்து விட்டன. அப்போது மனிதன் எப்படி வாழ்ந்திருப்பான்? புதர்களிலும் குகைகளிலும் வாழ்ந்திருப்பான். சைகை மொழி பேசியிருப்பான். ஆனால், அந்த ஆதிகாலத்தில்தான் ராமாயணம் நடந்தது என்கிறார்கள். ராவணனிடமிருந்து சீதையை மீட்க ராமன், ராமேசுவரம் அருகே பாலம் கட்டினான். அந்தப் பாலத்தையும் குரங்குகளே கட்டின. அவற்றிற்கு அணில்கள் கூட உதவின என்கிறார்கள்.
நெருக்கிப் பிடித்தால் ‘அப்படி ஒரு பாலம் கட்டப்பட்டது என்பது நம்பிக்கைதான்’ என்கிறார்கள். இந்துக்களின் அந்த நம்பிக்கையை சிதைப்பானேன் என்கிறார்கள். எனவே, கற்பனையான அந்தப் பாலம் மீது கை வைக்காதீர்கள் என்கிறார்கள். அவர்கள் வித்தியாசமானவர்கள் அல்லவா? எனவே அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் எட்டாத ஒரு கற்பனையை முன்னிறுத்தி ரகளை செய்கிறார்கள். நாடாளுமன்றத்தையே முடக்குகிறார்கள்.
நானூறு ஆண்டுகளாகக் கண் முன்னே காட்சி தரும் பாபர் மசூதியை இடித்தீர்கள். இப்போது இல்லாத ஒரு பாலத்தை இடிக்கக் கூடாது என்கிறீர்கள். என்ன நியாயம் என்று கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேருக்கு நேர் கேட்டார். அவ்வளவுதான், வித்தியாசமான அந்த வேடிக்கை மனிதர்கள் ஆடிப் போய் விட்டனர்!
‘சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற அந்த சேதுமேட்டை இடித்தால், உங்கள் ஆட்சி கவிழ்ந்துவிடும்’ என்று மல்கோத்ரா சாபம் கொடுத்தார். இடி விழுந்தது போல கலங்கிப் போனார்கள். ஆனால், முன்னர் அவர்களே சொன்ன வாதங்களுக்குக் கறுப்புத்திரை போடுகிறார்கள்.
1998_ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசின் பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்தார். ம.தி.மு.க.வின் அண்ணா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். தமது அரசு சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்தும் என்றார். அடுத்து வந்த நிதி நிலை அறிக்கையில் திட்ட ஆய்விற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆய்வு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தொடங்கி பாம்பன் தீவு வரை ஒரு கால்வாய். பின்னர் ஆடம்ஸ் (ராமர்) பாலம் வழியாக இன்னொரு கால்வாய் வெட்டுவது என்று அந்த அறிக்கை தெரிவித்தது. அந்த அறிக்கையை வாஜ்பாய் அரசு ஏற்றுக் கொண்டது. விளங்கச் சொன்னால் ராமர் பாலம் வழியாகக் கால்வாய் வெட்டச் சொன்னவர்களே இவர்கள்தான். இவர்கள் வகுத்துத் தந்த பாதை வழியாகத்தான் இப்போது கால்வாய் வெட்டப்படுகிறது. ஆனால், இன்றைக்கு, இல்லாத ராமர் பாலத்திற்கு ஆபத்து என்று அரசியல் நடத்தத் துடிக்கிறார்கள்.
தி.மு.க. அரசு மூலம் ராமர் பாலத்தை சோனியா காந்திதான் இடிக்கிறார் என்று உத்தரப்பிரதேசத் தேர்தலில் பிரசாரம் செய்தார்கள். இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள் என்றார்கள். ஆனால், அம்மாநில மக்கள் அந்த வாதத்தை மட்டுமல்ல, இந்த வித்தியாசமான மனிதர்களையும் புறக்கணித்து விட்டார்கள்.
ராமர் பாலம் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் இல்லை. கம்பராமாயணத்திலும் இல்லை என்பதனை நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு சுட்டிக் காட்டினார். இப்படியெல்லாம் சொல்லி இந்துக்களின் மனதில் ஈட்டி எறியாதீர்கள் என்று மல்கோத்ரா மன்றாடினார்.
வாஜ்பாய் அரசில் நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சராக இருந்தவர் உமாபாரதி. சேதுக்கால்வாய் திட்டப் பகுதியில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பற்றி ஆராய உத்தரவிட்டார். ஜி.எஸ்.ஐ என்ற நிறுவனம் ஆய்வு செய்தது. அங்கே இயற்கை உருவாக்கிய படிமங்கள் மட்டுமே உள்ளது. கட்டடங்கள் இல்லை என்று அந்த ஆய்வு தெரிவித்தது.
‘இயற்கை மாற்றங்களால் அங்கே நீண்ட மணல் திட்டுக்கள்தான் உருவாகியிருக்கின்றன. குரங்குகளோ, மனிதர்களோ உருவாக்கிய எந்த அமைப்பும் இல்லை’ என்று அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.
ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகள் ஒருபாலம் கட்டியதாகக் கற்பனை_அந்தப் பாலம் இன்றும் இருப்பதாகப் பிடிவாதம். இல்லாத பாலத்தை இடிக்காதே என்று வாயாடி அரசியல். இது தான் வித்தியாசமான மனிதர்களின் இன்றைய போராட்டம்.
சேதுக் கால்வாய் திட்டம் என்பது தமிழகத்தின் 150 ஆண்டுக் காலக் கோரிக்கை. அந்தக் கோரிக்கைக்கு அடித்தளம் அமைத்ததே வாஜ்பாய் அரசுதான். அதற்கு மன்மோகன் சிங் அரசு செயல்வடிவம் தருகிறது. இன்றைக்கு மதச்சாயம் பூசி இந்தத் திட்டத்தையே சீர்குலைக்க பி.ஜே.பி. பெரிதும் முயற்சிக்கிறது.
ஆரம்பம் முதலே சேதுக் கால்வாய் திட்டத்தை அமெரிக்கா பகிரங்கமாக எதிர்த்து வருகிறது. கன்னியாகுமரியிலிருந்து நேர் தெற்கே 900 கிலோ மீட்டர் தொலைவில் டி_கோ_கன்ஷியாத் தீவில் அதன் ராணுவ தளம் இருக்கிறது. ஈராக்கில் குண்டு போட இங்கிருந்துதான் அதன் விமானங்கள் பறந்து சென்றன. எனவே, சேதுக் கால்வாயால் தமது ராணுவ தளத்திற்குப் பாதகம் ஏற்படலாம் என்று கருதுகிறது.
இங்குள்ள இந்து மதவாத சக்திகளுக்கு அமெரிக்காதான் மணி கட்டி விட்டிருக்கிறது என்று சந்தேகம் எழுமானால், அதனை மறுப்பதற்கு இல்லை.
அமெரிக்காவில் இன்டோலிங் என்ற இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ராமர் பாலம் இருப்பதாக அந்தத் தளம்தான் நச்சுக் கருத்துக்களைப் பரப்புகிறது. அதனை ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் சுமந்து வருகின்றனர். இங்கே இந்துத்வா சக்திகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
மலிவான சபலங்களுக்கு இரையாகும் மனிதர்கள் மக்கள் மன்றங்களிலேயே வீற்றிருக்கிறார்கள். எனவே, பெற்ற குழந்தையையே அவர்கள் பேய்க் குழந்தை என்கிறார்கள்!
THANKS KUMUDAM SOLAI
mercredi 23 mai 2007
Inscription à :
Commentaires (Atom)